பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்க தெளிவற்ற நிபந்தனைகள்: காப்பீட்டு நிறுவனங்கள் மீது ஐகோர்ட் அதிருப்தி
சென்னை: பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டிசிபி என்ற தனியார் வங்கியின் சென்னை நுங்கம்பாக்கம் கிளையில் ரூ.71 லட்சம் கடன் பெற்ற லட்சுமி என்பவரின் கணவர், அந்த தொகைக்கு ஐசிஐசிஐ வங்கியில் காப்பீடு செய்து முறையாக ப்ரீமியம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மே 10-ம் தேதி மாரடைப்பால் லெட்சுமியின் கணவர் உயிரிழந்ததை அடுத்து காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, வங்கிக்கு லட்சுமி விண்ணப்பித்துள்ளார். மரணத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை. உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. மாரடைப்புக்கு காப்பீடு கோர முடியாது போன்ற காரணங்களைக் கூறி, லட்சுமியின் கோரிக்கையை வங்கி நிர்வாகம் நிராகரித்தது. இதை எதிர்த்து லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கரோனா காலகட்டத்தில் மனுதாரரின் கணவர் இறந்ததால் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. திருவேற்காடு நகராட்சி அளித்துள்ள சான்றிதழில் மாரடைப்பால் மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. அப்போது வங்கி தரப்பில், “கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காப்பீட்டு முறையீட்டு வாரியத்தைத்தான் மனுதாரர் அணுகியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிடப்பட்டது.
வங்கி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “காப்பீட்டில் மாரடைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. பாலிசி எடுத்த பிறகு முறையாக ப்ரீமியம் தொகை செலுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் காப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுக்க முடியாது. எனவே காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்த வங்கியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த தொகையை வங்கி நிர்வாகம் 4 வாரங்களில் வழங்க வேண்டும். பாலிசி தொகையை எந்தெந்த வகையில் வழங்க முடியாமல் தவிர்க்க முடியுமோ, அந்த வகைகளை தேர்வு செய்து காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை விதிக்கின்றன.
இந்த நிபந்தனைகள் குறித்து தனிநபர்களுக்கு போதுமான சட்ட அறிவு இருப்பது இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றன. இதனால் மனுதாரரைப் போன்ற நபர்கள் நீதிமன்றத்தை அணுகி தங்களது உரிமையை சட்டபூர்வமாக நிலை நாட்டிக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனைக்குரியது” என அதிருப்தி தெரிவித்தார்.
Share this content:
Post Comment