விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’-யின் உண்மை கதை என்ன?
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ரணபாலி’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
திருமணத்துக்கு பிறகு இந்த இணை முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் இது என்பது படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் படத்தின் டீசரை படக்குழு செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட்டது.
மைத்ரி மூவி மேக்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘அவர்கள் அந்தக் கதையை எரித்தார்கள். அவர்கள் அவனுடைய பெயரை அழித்தார்கள். அவர்கள் அவர்களுடை பாவங்களை அழித்தார்கள்.
ஆனால் அவனுடைய ஆவேசத்தை ஒருபோதும் அவர்களால் ஒருபோதும் அடக்கமுடியவில்லை. வரலாறும் வாய்மொழிக்கதைகளும் ஒருபோதும் மறக்கவில்லை. ‘ரணபாலி’ ஒரு மூர்க்கனின் சபதம் என்று தெரிவித்திருந்தது.
2.32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர், 1876- 78 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொல்லப்பட்ட 8 மில்லியன் இந்தியர்களின் நினைவாக என்ற எழுத்துக்களுடன் தொடங்குகிறது. அடுத்து அடுத்து விரியும் காட்சிகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவைக் குறிப்பாக அன்றைய மெட்ராஸ் மாகாணத்தைத் தாக்கிய பஞ்சத்தின் கோரத்தையும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அதற்கு எதிராக கிளர்ந்தெழும் புரட்சியாளனின் வீராவேசத்தையும் காட்டுகிறது.
ரணபாலியாக விஜய் தேவரகொண்டா காட்டியிருக்கும் ஆவேசமும், பிரிட்டிஷ் அதிகாரி சர் தியோடோர் ஹெக்டராக அர்னால்ட் வோஸ்லூவின் ஆதிக்கமும் மிரட்டுகின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன.
தாது பஞ்சத்தின் உண்மை கதை: இந்திய சரித்திரத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்று ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்தியாவை பாதித்த பெரும் பஞ்சம். தாது வருடத்தில் வந்ததால் அந்த பஞ்சம் தாது பஞ்சம் என்றும் அழைக்கப்படும்.
அந்த பஞ்சத்தைப் பற்றிய அநேக வாய்மொழிக்கதைகள் இன்னும் சொல்லப்படுவதுண்டு. அப்படியான ஒரு வாய்மொழிக்கதை தான் ‘ரணபாலி’யுடையதும். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய அந்த வீரனான ரணபாலியாக விஜய் தேவரகொண்டாவும், போராட்டத்தில் அவருக்கு துணைநின்ற மனைவி ஜெயாம்மா கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
பஞ்சத்தின் பின்னணியில் கதை இருந்தாலும் இது எதிர்ப்புணர்வு, உயிர்பிழைத்திருத்தில் தைரியம் ஆகியவைகள் பற்றியும் பேசுவதாக டீசர் உணர்த்துகிறது. இந்த தாது பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதும் இப்பஞ்சம் பற்றி சொல்லப்படும் கதைகளில் ஒன்று. அது டீசரிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
கதை சொல்லும் கதாபாத்திரம் ‘அன்னபூரணி தேசம்டா இது. இங்க சாப்பாட்டுக்கு பஞ்சமா. இது எல்லாம் நம்ம பூமிய விழுங்குறதுக்கு எழு கடல் தாண்டி வந்த அந்த பஞ்சராட்ஷசனோட பசி’ எனச் சொல்கிறது. பஞ்சம் பற்றிய வரலாற்று உண்மை சம்பவங்களைத் தழுவி ‘ரணபாலி’ எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாக அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது.