தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை
திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- சாட்டை துரைமுருகன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியானது.
அதில், கட்சி நிர்வாகிகளை சீமான் விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.பி. வருண்குமார் சீமானின் பேச்சை ‘டேக்’ செய்து,தனது எக்ஸ் பக்கத்தில் ‘கொச்சையான பொய்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றம் மூலம் சந்திப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, எஸ்.பி. பதிவுக்கு நாதகவினர் பலரும் கடுமையாக விமர்சித்தும், கொச்சையாகவும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டனர். மேலும், எஸ்.பி.யின்தாயார், மனைவியும், புதுக்கோட்டை எஸ்.பி.யுமான வந்திதா பாண்டே ஆகியோரை விமர்சித்துப் பதிவுகள் வந்தன.
இந்நிலையில், எஸ்.பி. வருண்குமார் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வாரப்பத்திரிகை ஒன்றின் யூடியூப் சேனலில் வெளியான செய்தியை `டேக்’ செய்து,”இதை தூண்டி விட்ட நபர்களை நீதித்துறை முன் நிறுத்துவேன். வெளிநாடுகளிலிருந்து ஆபாசமாகப் பதிவு செய்யும் போலி ஐ.டி.க்களையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித் துறையின் மேல் 100 சதவீதம் எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்துக்கும், அவதூறுக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “எஸ்.பி. வருண்குமார், அவரதுகுடும்பத்தினர் குறித்து பதிவிடப்படும் அவதூறு கருத்துகளை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இதற்கிடையே, “எஸ்.பி. வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை. போலி ஐ.டி. மூலம் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்” என்று சீமான் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
Share this content:
Post Comment