தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 1,872 பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
மாநிலம் முழுவதும், தலைவர்களின் சிலைகள் நேற்று மாலையில் இருந்தே துணியால் மறைக்கும் பணி தொடங்கப்பட்டது. அரசியல் சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் பேருந்து நிறுத்தங்களில் உள்ள விளம்பர போர்டுகளில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனை விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் அரசின் சாதனை விளம்பரங்கள் அகற்றப்பட்டன. அமைச்சர்களின் அறைகளை மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும் எம்எல்ஏ, எம்பி அலுவலகங்கள், மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் அறைகளும், வார்டு கவுன்சிலர் அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டன. அவர்களின் அரசு வாகனங்கள் தேர்தல் பணிக்கு மாற்றப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு தினசரி 3 சுழற்சி முறையிலும், வீடியோ கண்காணிப்புக் குழு தினசரி 2 சுழற்சி முறையிலும் தனது பணியை மேற்கொள்ளும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான அனைத்து புகார்களையும் பறக்கும் படை கவனிக்கும்.
நிலையான கண்காணிப்புக் குழு, மாவட்ட எல்லை அல்லது வேறு ஏதேனும் இடத்தின் எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து பணம் அல்லது லஞ்சம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை மேற்கொள்ளும். வீடியோ கண்காணிப்புக் குழு, அனுமதி பெற்ற பொதுக்கூட்டம், பிரச்சாரம், பேரணிகளை வீடியோ பதிவு செய்யும். தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 1,872 பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் சோதனையைத் தொடங்கியுள்ளன.



Post Comment