தமிழகத்துக்கு மாதம்தோறும் 17,100 மெ.டன் கோதுமை வழங்க மத்திய அரசு அனுமதி: அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: தமிழகத்திற்கு மாதம் 8,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கி வந்த மத்திய அரசு, அதனை 17,100 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்த்தி உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட மலைகிராமமான வடகாடு ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் கோட்டைவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (அக். 06) நடைபெற்றது.

திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெ.திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சக்கரபாணி புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் பேசியதாவது: தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடுகளை கட்டி வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன.

தமிழகத்திற்கு மாதம் 8,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்படுகிறது. அதை 25,000 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்தி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதன் பயனாக தற்போது 17,100 மெட்ரிக் டன் கோதுமை வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரும். இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார். நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் அய்யம்மாள், வடகாடு ஊராட்சி தலைவர் தனலட்சுமி, வாடிப்பட்டி ஊராட்சித்தலைவர் ஜோதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed