சோதனை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த ஆர்டிஓ ஆய்வாளர் கைது
சேலம்: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் கந்தம்பட்டியில் உள்ளமேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுப்பதாகவும், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாகவும் சதாசிவம் பேரம் பேசியுள்ளார்.
சதாசிவம் மகன்… இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம், ஆய்வாளர் ரவிக்குமார் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம், ஆய்வாளர் ரவிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு, ஓமலூர் சுங்கச்சாவடி அருகே தனது மகன் ரூ.1 லட்சத்துடன் காத்திருப்பதாகவும், அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
அதன்படி, ஆய்வாளர் ரவிக்குமாரிடம், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவத்தின் மகன் அசோக் ரூ.1 லட்சம் பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது, மாறுவேடத்தில் இருந்த டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீஸார் அசோக்கை பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர். தனது தந்தை சதாசிவம் பணத்தைக் கொடுத்து அனுப்பியதாகவும், அது லஞ்சப் பணம் என்று தெரியாது என்று அசோக் தெரிவித்ததால், அவரை போலீஸார் விடுவித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், மல்லசமுத்திரத்தில் வீட்டிலிருந்த சதாசிவத்தை நேற்றுகைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதாசிவம், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Share this content:
Post Comment