சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை: ஊர்காவல் படை வீரர் கூட்டாளிகளுடன் கைது
சென்னை: சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக ஊர்காவல் படை வீரர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், துரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விநியோகம் நடைபெற்றுவதாக அக்காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துரைப்பாக்கம் போலீஸார் துரைப்பாக்கம் செக்ரடரியேட் காலனி 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 448 கிலோ குட்கா குட்பட 6 வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக துரைப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ் (47), அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (30), கண்ணகி நகரில் உள்ள எழில் நகரைச் சேர்ந்த ரகு (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களில் குணசேகரன் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக பணி செய்து வந்துள்ளார். இவர்தான் குட்கா விற்பனைக்கு மூளையாக செயல்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Share this content:
1 comment