சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர் உட்பட 6 பேரின் வீடுகளில் போலீஸார் தீவிர சோதனை
சென்னை: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது.
சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில்,சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது.
இதேபோல, சென்னை காவல் துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சைபர்க்ரைம் போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, சமீபத்தில் ஒருயூ-டியூப் சேனலின் செயல்பாட்டை சமூக வலைதள கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர். அந்த சேனலில், சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் ஹமீது உசேன் என்பவர் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தது கண்டறியப்பட்டது.
ரகசிய கூட்டங்கள்: இதுகுறித்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல்ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டையில் ரகசிய கூட்டங்கள் நடத்தி,அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் திரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பேராசிரியர் ஹமீது உசேன், பொறியியல் படித்தவர். முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் சில காலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
தேர்தல் முறைக்கு எதிராக.. இந்நிலையில், அவர் ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கி அதில், இந்திய தேர்தல் முறைக்கு எதிராகவும், மதம் சார்ந்த அடிப்படை சித்தாந்தம் தொடர்பாகவும் பேசி பிரச்சாரம் செய்துள்ளார்.
இதில் ஈர்க்கப்பட்டு தொடர்புகொள்ளும் நபர்களை, ராயப்பேட்டையில் ஞாயிறுதோறும் நடைபெறும் கூட்டத்துக்கு வரவழைத்துள்ளார். அவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோரும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (UAPA – உபா) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களது வீடு, ராயப்பேட்டையில் கூட்டம் நடந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம். காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ) ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
ஓரிரு நாட்களில் இந்த விசாரணை தீவிரமடையும் என்று தெரிகிறது. அதன்பின்னர், இந்த அமைப்பின் முழு பின்னணியும், அதன் சங்கிலித் தொடர், பின்புலத்தில் இருந்து செயல்படுபவர்கள், இயக்குபவர்கள் என அனைத்து தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share this content:
Post Comment