சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கடலூர்: சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும். வீராணம் ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த ஏரி காத்து வருகிறது.

ஏரியை ஒட்டியுள்ள கிராம பகுதிகிளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு ஏரி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில்இருந்து சரிவர நீர்வரத்து இல்லாதாதால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் சரிவர அனுப்பப்படவில்லை. ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. கடும் வெயில் காரணமாக ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்து கடந்த ஒரு மாதமாக ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வாலாஜா ஏரி,போர்வெல்கள், என்எல்சி சுரங்கம் 1ஏ ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு அரசணையை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி மேட்டூர் அணையில் சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் சனிக்கிழமை கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்று வழியாக தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வந்தது.

இதனைதொடர்ந்து இன்று மதியம் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இருந்து வடவாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் வளத்துறை அதிகாரிகள் கீழணை பகுதி மற்றும் வடவாற்று பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீராணம் ஏரிக்கு போதுமான அளவு தண்ணீர் வந்தவுடன் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this content:

Previous post

துறை செயலர்கள் பேச்சுவார்த்தை எதிரொலி: முடிவுக்கு வந்த போக்குவரத்து ஊழியர் – காவலர் மோதல்

Next post

பாலிசி தொகை வழங்குவதை தவிர்க்க தெளிவற்ற நிபந்தனைகள்: காப்பீட்டு நிறுவனங்கள் மீது ஐகோர்ட் அதிருப்தி

Post Comment

You May Have Missed