Loading Now
https://dhinakani.com/wp-content/uploads/2026/09/Untitled-1-copy-24.jpg

குட்டி யோகா டீச்சர்… அமெரிக்க சிறுமி கின்னஸ் சாதனை!

வாஷிங்டன், செப். 23
அமெரிக்காவைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் உலகின் மிக இளம் வயது பெண் யோகா ஆசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். இவர் தனது 5 வயது 337 நாட்கள் இருக்கும் போதே, பெரியவர்களுடன் இணைந்து 200 மணிநேர சான்றளிக்கப்பட்ட யோகா ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இப்போது 6 வயதாகும் இவர், கின்னஸ் உலக சாதனை 2027 புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
பீனிக்ஸின் யோகா பயணம் அவர் 3 மாத குழந்தையாக இருக்கும்போதே தொடங்கிவிட்டது. யோகா ஆசிரியரான அவரது தாய் சிட்னி ஹிக்ஸுடன் இணைந்து “மம்மி அண்ட் மீ” வகுப்புகளில் பங்கேற்றதன் மூலம் யோகா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 4 வயதிற்குள் கடுமையான மற்றும் மேம்பட்ட ஆசனங்களைச் செய்யும் அளவுக்கு திறமை பெற்றார். வளர வளர யோகா மீது ஆர்வம் கொண்ட அவர், கடினமான உடற்கூறியல் பாடங்களைப் படித்தல், யோகா குறித்த கட்டுரைகள் எழுதுதல் மற்றும் தினசரி யோகா பயிற்சி வகுப்புகள் என தீவிரமாக உழைத்து இந்த தகுதியை அடைந்துள்ளார்.
பீனிக்ஸ் தனது தாயுடன் இணைந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார். வகுப்புகளை எடுக்கும்போது, “குழந்தைகள் யாராவது ஆசனங்கள் செய்யக் கடினமாக உணர்ந்தால், உங்களால் முடியும், உங்களின் சிறந்த முயற்சியைக் கொடுங்கள். மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள், உடல் சற்று ஆடினாலும் பரவாயில்லை” என்று அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறுகிறார்.
இது குறித்து பெருமிதம் கொள்ளும் அவரது தாய் சிட்னி, “பீனிக்ஸ் தனது விளையாட்டுத்தனமான அதே சமயம் ஆற்றல்மிக்க கற்பித்தல் முறையால் வெறும் யோகாவை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. அமைதியையும், விழிப்புணர்வையும் சமூகத்தில் விதைக்கும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
பீனிக்ஸ், வருங்காலத்தில் விண்வெளி வீரராக மாறி, விண்வெளியில் யோகா செய்யும் முதல் நபராக வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு பிடித்த யோகாசனம் ‘விருக்ஷாசனம்’ ஆகும். இளம் வயதிலேயே கடின உழைப்பால் கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த குட்டி யோகா ஆசிரியருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share this content:

You May Have Missed