இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜக பின்னிய ‘அச்ச வலை’ அறுந்துவிட்டது: ராகுல் காந்தி
புதுடெல்லி: பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டது என்பதையே 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இண்டியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர். ஹிந்துஸ்தான் வாழ்க! இந்திய அரசியலமைப்பு வாழ்க!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் முடிவுகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இத்தகைய முடிவுகளை வழங்கிய பொதுமக்கள் முன் தலைவணங்குகிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
பாதகமான சூழ்நிலையிலும் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன். பாஜகவின் ஆணவத்தையும், தவறான நிர்வாகத்தையும், எதிர்மறை அரசியலையும் பொதுமக்கள் தற்போது முற்றாக நிராகரித்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது. மோடி-அமித் ஷா அரசியல் நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு இது ஒரு வலுவான சான்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த 13 இடைத்தேர்தல்களில் 10-ல் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 6 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது. திமுகவும், ஆம் ஆத்மியும் போட்டியிட்ட தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த வெற்றிகள், வடக்கே பஞ்சாப் முதல் தெற்கே தமிழ்நாடு வரையிலும், கிழக்கே மேற்கு வங்கம் வரையிலும் உள்ள மாநிலங்களில் கிடைத்த வெற்றிகள். இடைத்தேர்தல் முடிவுகளை மிகைப்படுத்தப்படக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரத்தில், பாஜகவால் ஒதுக்கித் தள்ள முடியாத படிப்பினைகளும் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு, வெறுப்பை பரப்புவது போன்ற காரணங்களால் பாஜக மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது” என்று விமர்சித்துள்ளார். | வாசிக்க > 13-ல் இண்டியா கூட்டணி 10, பாஜக 2 இடங்களில் வெற்றி – 7 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்
Share this content:
Post Comment