அவிநாசி | விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்
திருப்பூர்: அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகே வலசப்பாளையம் என்ற இடத்தில் இன்று (மே 24) அதிகாலை கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்தக் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து அந்தக் காரின் மீது மோதியது. மேலும், பேருந்துக்குப் பின்னால் வந்த கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட காரும் பேருந்தின் மீது மோதியது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக பெருமாநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், போலீஸ் வரும் முன்பாகவே, அந்தக் கார்களில் பயணம் செய்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
விபத்தில் சிக்கிய கார்களை சோதனையிட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். 2 கார்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் கார்களில் இருந்த குட்கா மூட்டைகளை கைப்பற்றி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்தக் கார்கள் எங்கிருந்து வந்தன, காரை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this content:
Post Comment