விக்கிரவாண்டியில் வெற்றி, தோல்வியால் மொட்டை அடித்துக் கொண்ட கட்சி உறுப்பினர்கள்!

திமுக – பாமக கட்சியினர்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி இத்தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது.

“இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது; அதனால் நாங்கள் போட்டியிடவில்லை” என்று அதிமுக ஒதுங்கிய சூழலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்கு பதிவாகும்

இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 76,757 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று, தனது வைப்புத்தொகையை தக்க வைத்துக் கொண்டார். 3 -வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10, 602 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.

இந்நிலையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி பின் தங்கியதை அறிந்த காணை ஒன்றியத்திற்குட்பட்ட நத்தமேடு கிராமத்தை சேர்ந்த குணா என்பவர் பாமக தோற்றதால் தன் சபதத்தின்படி மொட்டை அடித்துக்கொண்டார். இதே போல விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவரணி நிர்வாகிகள் திமுக வெற்றி பெற்றால் மொட்டை அடித்து கொள்வதாக வேண்டிக்கொண்டு திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து கொண்டனர்.

Share this content:

Previous post

சிதம்பரத்தில் போலீஸாரை கண்டித்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

Next post

“கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி தேவை” – மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை

Post Comment

You May Have Missed