மேற்குத் தொடர்ச்சி மலையே இருக்காது.. எச்சரித்த நீதிமன்றம்.. ஆக்ஷனில் இறங்கிய கோவை கலெக்டர்
கோவை: கோவை மாவட்டத்தில், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்ட விரோத மண் எடுக்கும் பணிகளை தடுக்காவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, பேரூர் வட்டம், ஆலந்துறை, காளிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக மண் எடுத்த இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தின் அழகே மேற்கு தொடர்ச்சி மலைதான். இந்நிலையில், மலையின் அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கரை, ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர் புருஷோத்தமன் சட்ட விரோத மண் கடத்தல் குறித்த வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் சதிஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் மண் எடுக்கப்படும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், கலெக்டருக்கு பதிலாக கனிமவளத் துறை உதவி இயக்குநர் அங்கு ஆய்வு செய்ததோடு, ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. பின்னர், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கனிமவள துறை உதவி இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்று கூறி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மண் எடுக்கப்படுவது வீடியோவில் உறுதி ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து அனுமதித்தால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும். அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மண் அள்ளுவதால் ஏற்படும் குழிகளில் வன விலங்குகள் சிக்கும் அபாயமும் உள்ளதால் அரசு, பட்டா நிலங்களில் மண் எடுப்பதை தடுக்க மற்றும் தடை செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். இந்த செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும், மணல் எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Share this content:
Post Comment