மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: உள்துறை அமைச்சகம் வழங்கியது
புதுடெல்லி: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டன. இதில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.6,000 கோடியை நிவாரண நிதியாக நேற்று வழங்கியது.
அதன்படி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்டிஆர்எப்) மத்திய அரசின் பங்காகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முன்பணமாகவும் இந்தத் தொகை 14 மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அவற்றில் மகாராஷ்டிரா ரூ.1,492 கோடி, ஆந்திரா ரூ.1,036 கோடி, அசாம் ரூ.716 கோடி, பிஹார் ரூ.656 கோடி, குஜராத் ரூ.600 கோடி, இமாச்சல் ரூ.189 கோடி, கேரளா ரூ.146 கோடி, மணிப்பூர் ரூ.50 கோடி, மிசோரம் ரூ.21 கோடி, நாகாலாந்து ரூ.19 கோடி, சிக்கிம் ரூ.23 கோடி, தெலங்கானா ரூ.417 கோடி, திரிபுரா ரூ.25 கோடி மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்களின் துயரத்தை போக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் தோளோடு தோளாக இருந்து மத்திய அரசு செயல்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.
மேற்கூறிய மாநிலங்களுக்கு மத்திய ஆய்வு குழுவினர் ஏற்கெனவே சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். அந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share this content:
Post Comment