மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு தீர்மானம்..!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில், நவம்பர் 12, 2025 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஜெ.நொலஸ்கோ. துணைப் பொதுச் செயலாளர்கள் தாம்பரம் எம். யாகூப். மைதீன் சேட்கான், தஞ்சை பாதுஷா, தலைமை நிலையச் செயலாளர் வழ. மு.ஜெய்னுல் ஆபிதீன் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கு கொண்டனர்.
தற்போது பன்னிரண்டு மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல் ஆணையத்தின் “Special Intensive Revision SIR ” எனப்படும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு’, ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கையல்ல – இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை குலைக்கும் ஆபத்தான முயற்சியாகும். “சுத்திகரிப்பு” அல்லது “தூய்மைப்படுத்தல்” என்ற நிர்வாக மொழியின் பின்னால், குடிமக்களின் உரிமையை சந்தேகத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான புதிய வழிமுறையை அது உருவாகி வருகிறது.
நம் நாடு விடுதலை அடைந்த தொடக்க நிலையிலேயே 1947 1950 காலக்கட்டத்தில், குடியுரிமை சட்டமே இல்லாத நிலையில் தயாரிக்கப்பட்ட முதல் வாக்காளர் பட்டியல், ஒரு புரட்சிகர அரசியல் முயற்சியாக இருந்தது. அதில் அளிக்கப்பட்ட முதல் வாக்குறுதி:
“இந்த நிலத்தில் வாழும் ஒவ்வொருவரும், அவர் இந்தியர் அல்ல என்று நிரூபிக்கப்பட்டால் தவிர இக்குடியரசின் எல்லா பலன்களையும் அனுபவிக்க உரிமையுள்ளவர்” அந்த வாக்குறுதியை மீறி, தற்போதைய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடைமுறை மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், அவர்களை சந்தேகத்தின் பார்வையில் அணுகும் நடைமுறையை உருவாக்குகின்றது. தங்கள் குடியுரிமையை தனி நபர்கள் நிரூபிக்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய அரசு. இப்போது அவர்களை விசாரிக்கும் அமைப்பாக மாறியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 324ஆம் பிரிவின்படி தேர்தல் ஆணையத்தின் கடமை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதாகும். ஆனால் இப்போது, கடுமையான ஆவணச் சான்றுகள் கேட்டு, குடியுரிமை சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவது அதன் அதிகார எல்லையை மீறுவதாகும்.
-இந்த நிர்வாக அத்துமீறலின் விளைவாக குடியிருப்பு ஆவணமில்லாத தொழிலாளர்கள், வீடற்றவர்கள், திருமணத்திற்குப் பிறகு முகவரி மாறும் பெண்கள், ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டோர் – என பல தரப்பட்டவர்கள் தங்கள் வாக்குரிமையுடன் சேர்த்து குடியுரிமையையும் இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறிய தகவல் பிழையால் கூட அவர்களின் அரசியல் இருப்பே அழிக்கப்படும் அபாயம் உள்ளது. தொழில்நுட்பத்தின் பெயரில் ஜனநாயகம் ஒழிக்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951ல் ‘வாக்காளர் சீராய்வு’ குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் எந்த பிரிவிலும் ‘சிறப்பு வாக்காளர் சீராய்வு’ என்று குறிப்பிடப்படவில்லை. ‘சிறப்பு’ என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர் குடியுரிமை உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவிற்கு விரோதமானது என்று இச்செயற்குழு கருதுகிறது.
எனவே, உடனடியாக SIR எனப்படும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடைமுறையை நிறுத்தி, தன் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை வாக்குறுதியான அனைத்து குடிமக்களும் வாக்காளர்களே என்ற கோட்பாட்டை தேர்தல் ஆணையம் காக்க வேண்டும்.
Post Comment