மதுரை – துபாய் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம் ரத்து: பயணிகள் கடும் வாக்குவாதம்
மதுரை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை – துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது
ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் துபாய் – மதுரைக்கு தினமும் விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. காலை 7.40 மணி அளவில் துபாயில் இருந்து கிளம்பி 10.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். இதன்பின், மதுரையில் இருந்து பகல் 12 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை துபாயிலிருந்து 172 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகளுக்கான மாற்று ஏற்பாடு செய்யும் வரை விமான பயணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிர்வாகம் அறிவித்தது.
இதன் காரணமாக மதுரையில் இருந்து பகல் 12 மணிக்கு துபாய்க்கு 168 பயணிகளுடன் புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதுரையிலிருந்து துபாய் செல்லும் பயணிகள் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனைக்கு தயாரான நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் விமான நிலைய வளாகத்திலுள்ள ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அலுவலக ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share this content:
Post Comment