திருமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்: விஐபி பிரேக் தரிசனம் வாரத்தில் 3 நாட்கள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரமாகிறது. சாமானிய பக்தர்களுக்காக வாரத்தில் 3 நாட்கள் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது திருப்பதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

திருப்பதி மற்றும் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே காணப்படுகிறது. திருப்பதி நகரில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கும் மையங்களில் இரவு முதலே பக்தர்கள் தங்கி, டிக்கெட்டுகளை பெற்று செல்கின்றனர். திருமலையில் தங்கும் அறைகளை பெறவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும், தரிசனத்துக்குச் செல்லவும், லட்டு பிரசாதம் வாங்கவும், அன்னதானம் பெறவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் நேற்று பக்தர்கள் காத்திருந்தனர். இவர்களுக்கு வரிசையிலேயே உண்ண உணவு, குடிநீர், மோர், சிற்றுண்டி, தேநீர் போன்றவற்றை வழங்குவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரித்ததையொட்டி, சாமானிய பக்தர்கள் அதிக நேரம் சுவாமியை தரிசிக்க வேண்டி, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed