“டெல்லி மக்கள் மீண்டும் பிரதமரை ஆதரிப்பார்கள்” – வாக்களித்த அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி மக்கள் மீண்டும் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்று வாக்களித்த பின்னர் நம்பிக்கை தெரிவித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், காலையிலேயே வாக்களித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்தபோது, “இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல் ஆண் நான் தான். தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருமாறு வேண்டுகிறேன். இது மிக, மிக முக்கியமான தேர்தல். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல். இத்தேர்தலில் டெல்லி மக்கள் மீண்டும் பிரதமர் மோடிக்காக, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக வாக்களிப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் இதுவரை ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை இண்டியா கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா முன்னாள் முதல்வரும், கர்னால் தொகுதி வேட்பாளருமான மனோகர் லால் கட்டார் வாக்களித்த பின்னர் அளித்தப் பேட்டியில், “நான் எனது வாக்கை செலுத்தினேன். மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

மனோகர் லால் கட்டார் முதல் நவீன் ஜிண்டால் வரை: முன்னாள் முதல்வர்கள் மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), மெகபூபா முப்தி (காஷ்மீர்), முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 பேர் மூன்றாம் பாலினத்தவர் என 11.13 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11.4 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலோடு ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வட மாநிலங்களில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடிகளில் நிழற்கூரைகள், தண்ணீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Share this content:

Post Comment

You May Have Missed