சேலத்தில் ரவுடி வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்
சேலம்: சேலத்தில் ரவுடி வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், மதிப்பு இழப்பு செய்யப்பட்ட, ரூ.1 கோடி மதிப்பிலான ரூ.500,ரூ.1,000 நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சபீர்(32). ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சபீர் வீட்டில் அம்மாப்பேட்டை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான, பழையரூ.500, ரூ.1,000 நோட்டுகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மத்தியஅரசு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த சபீரிடம், அவரது நண்பர்கள் 2 பேர் ரூ.1 கோடியைக் கொடுத்து, அவற்றை மாற்றித் தருமாறு கோரியிருந்தனர்.
நண்பர்கள் கொடுத்த பணம்: ஆனால், சபீரால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை மாற்ற முடியாத நிலையில், அவற்றை வீட்டில் வைத்துள்ளார். இதனிடையே, நண்பர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
பணம் மாற்றம் தொடர்பாக ரூ.1 லட்சம் செலவாகிவிட்டதால், அதைக் கொடுத்துவிட்டு, மதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடியை வாங்கி செல்லுமாறு மற்றொருவரிடம் சபீர் கூறியது தெரியவந்தது.
இதையடுத்து, அம்மாப்பேட்டை போலீஸார் ரவுடி சபீரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடியைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this content:
Post Comment