கொடைக்கானலில் இளைஞர்களை சீரழிக்கும் போதை காளான்: வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் கும்பல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ‘மேஜிக் மஸ்ரூம்’ எனும் போதைக் காளான் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் இளைஞர்கள் பலர் இதற்கு அடிமையாவதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதைக் காளானைத் தேடி வருவது அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் அடர்ந்த வனப் பகுதியில் வளரும் இந்தக் காளான்களை, முன்பு விறகு எடுக்கச் செல்வோரிடம் கூறி, போதைப் பொருள் விற்பனையாளர்கள் எடுத்து வரச் செய்தனர். அவற்றை தங்களுக்குத் தெரிந்த சிலருக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தனர்.
நாளடைவில் ஏராளமானோர் போதைக்கு அடிமையாகிவிட்ட நிலையில், தற்போது விற்பனையாளர்களே மலைப் பகுதிகளில் தேடி அலைந்து, போதைக் காளானை பறித்துவரத் தொடங்கிவிட்டனர். தற்போது போதைக்கு அடிமையான பலர் சுற்றுலாப் பயணிகள்என்ற போர்வையில் கொடைக்கானலுக்கு அடிக்கடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
சிறிய அளவில் இருக்கும் காளானின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே போதைக் காளான் எங்கு கிடைக்கும் என்று இளைஞர்கள் விசாரிக்கின்றனர். அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள், பாதுகாப்பின்றி செயல்படும் குடில்களில் போதைக் காளான் விநியோகம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இந்த காளான் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால், மேலும் பல இளைஞர்கள் இதைத் தேடி கொடைக்கானலுக்கு வருவது அதிகரித்துள்ளது.
அண்மையில் ஏரிச்சாலை, பாம்பார்புரம், பேரிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த கேரளா,தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலக் கல்லூரி மாணவர்களிடம் போதைக் காளான் விற்க முயன்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையானால்தான் போதைக் காளான் கலாச்சாரத்தைத் தடுக்க முடியும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போதைக் காளானை முட்டையுடன் சேர்த்து ஆம்லேட்டாக உட்கொள்கின்றனர். இதில் உள்ள ‘சைலோசின்’ என்ற வேதிப்பொருள் உட்கொள்பவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால் மாயத்தோற்றம் ஏற்பட்டு, போதையை அனுபவிக்கின்றனர். போதைக் காளான் விற்போர், வாங்குவோரை கைது செய்தாலும், அவர்களைத் தண்டிக்க முறையான சட்டப்பிரிவு இல்லை. இதனால் கைது செய்யப்பட்டோர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வரும் நிலைதான் உள்ளது.
போதைக் காளானை பறிக்கச் செல்வோரை கைது செய்யவும், அவற்றை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிந்து தடுக்கவும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா நகரமான கொடைக்கானல், போதை நகரமாக மாறிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Share this content:
Post Comment