ரூ.38 லட்சம் ஏமாற்றியதாக பாஜக மாநிலச் செயலர் மீது தி.மலை எஸ்பி அலுவலகத்தில் புகார்
திருவண்ணாமலை: பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ரூ.38 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக திருவண்ணாமலை தெற்கு பாஜக முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், “நான் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவராக 2024-ம் ஆண்டு இருந்தபோது, நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் சென்னையைச் சேர்ந்த அஸ்வத்தாமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அஸ்வத்தாமன் அப்போது பாஜகவின் மாநிலச் செயலாளராக இருந்தார்.
இந்நிலையில், அஸ்வத்தாமன் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியன்று என்னிடம், தேர்தலில் செலவு செய்ய பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை, தேர்தலில் பணம் செலவு செய்து உதவுமாறு கோரினார். தேர்தல் முடிந்தவுடன் பணத்தை திரும்பித் தருவதாகவும் உறுதி கூறினார்.
அவர் கூறியதை நம்பி அவருக்குத் தேர்தல் செலவு செய்ய கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 30 முதல் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வரை என்னிடம் இருந்து பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.38 லட்சம் தேர்தல் செலவிற்காகக் கடனாகப் பெற்றார்.
பின்னர், கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி அன்று, அஸ்வத்தாமன் எனது பெயருக்கு ரூ.38 லட்சத்துக்கு காசோலை வழங்கி, காசோலையை ஏப்ரல் 20-ம் தேதி அன்று வங்கியில் செலுத்திப் பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவர் கூறிய தேதி அன்று காசோலையை வங்கியில் செலுத்தினேன். அப்போது, அஸ்வத்தாமன் காசோலைக்கு ‘Stop payment’ கொடுத்துள்ளமையால் பணம் பெற முடியவில்லை.
இது குறித்து அஸ்வத்தாமனிடம் கேட்டபோது அவகாசம் கேட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கேட்டபோது அவர் பணம் திரும்பித்தர முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்தார். நான் இது குறித்து கட்சியின் மையக் குழுவில் முறையிட்டேன். அவர்கள் என்னையும் அஸ்வத்தாமனையும் அழைத்து பேசினார்கள்.
அப்போது, அஸ்வத்தாமன் 2 வருடத்துக்குள் திருப்பி தருவதாக தெரிவித்தார். அவர் கூறியது போன்று 2 வருடம் காத்திருந்தேன், ஆனாலும் அவர் பணத்தை திரும்பித் தரவில்லை.
அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தாலும் அவரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வருவதில்லை. பின்னர்தான் நான் அவரால் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்.
எனவே, என்னை திட்டமிட்டு ஏமாற்றி, ‘Stop Payment’ செய்த காசோலையை அளித்து, பணம் தராமல் ஏமாற்றிவரும் அஸ்வத்தாமன் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
புகார் மனு அளித்துள்ள முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தற்போது ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் இனைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.