Loading Now

உடுமலையில் தென்னை மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்!

உடுமலை: உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடுமலை அடுத்துள்ள தளி பேரூராட்சி, தீபாலபட்டி, வல்லக்குண்டாபுரம், ஜிலேப்ப நாயக்கன்பாளையம், கொடிங்கியம், எரிசினம்பட்டி, தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வறட்சியின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.

இப்பகுதியில் சுமார் 50,000 ஏக்கர் நிலபரப்பில் வேளாண் சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட மரப் பயிர்களும், மக்காச்சோளம், கம்பு, கொள்ளு உள்ளிட்ட பயிறு வகை, தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆண்டுக் கணக்கில் பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கண்ணெதிரே காய்வதைப் பார்க்க முடியவில்லை.  டிராக்டர் மற்றும் பைப்லைன் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களைக் காப்பாற்ற போராடி வருகிறோம்.

மரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கால்நடைகளுக்கும் மேய்ச்சல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க கிராமங்கள்தோறும் இலவச பசுந்தீவனம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Share this content:

You May Have Missed