முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
சென்னை: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நடப்பாண்டு விளையாட்டுப் போட்டிகளில் 26.38 லட்சம் வீரர்கள் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வர் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம், கொடி மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்திய அமைச்சர், மகளிர் கால்பந்து போட்டிக்கான டாஸை போட்டு ஆட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் அக். 4-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 16.28 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், நடப்பாண்டு இணையதளம் வாயிலாக இதுவரை இல்லாத சாதனையாக 26.38 லட்சம் வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 14.86 லட்சம் பள்ளி மாணவர்கள், 5.35 லட்சம் கல்லூரி மாணவர்கள், 5.07 லட்சம் பொதுமக்கள், 69 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் 38 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் அடங்குவர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.74 லட்சம் பேரும், சென்னையில் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.52 கோடி நிதி உதவி இன்றைக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து சர்வதேச அரங்கில் பெருமை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்தார்.
விழாவில் விளையாட்டுத் துறை செயலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், பொதுமேலாளர் ல.சுஜாதா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.