Loading Now

“குடியரசு கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டாலர்” – ட்ரம்ப் வாக்குறுதி

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸில் தனது செல்வாக்கை குடியரசுக் கட்சி தக்க வைத்துக்கொண்டால் வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மக்களவை என கூறப்படும் காங்கிரஸுக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டு வந்த சட்டங்கள் எளிதாக நிறைவேறின.

காங்கிரஸில் பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ள திட்டமிடும் டொனால்டு ட்ரம்ப், அதைக் கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டல்லாஸில் நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “நவம்பரில் நடைபெற உள்ள காஙகிரஸ் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சியினர் வெற்றி பெற்றால் நீங்கள் (வாக்காளர்கள்) எங்களுடன் சேர்ந்த வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டாலர் கிடைக்கும். இது ட்ரம்ப்பின் ஈவுத்தொகை என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், ஈரான் விவகாரம் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் உடனான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்காவின் செலவு கூடிக்கொண்டே இருக்கிறது. ஆயுதங்களின் இருப்பு குறைவதோடு, எண்ணெய் விலையும் உயர்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு தனது உரையில் இது குறித்து குறிப்பிட்டுப் பேசிய டொனால்டு ட்ரம்ப், “உணவுப் பொருட்களின் விலையும் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெற்றவுடன் எண்ணெய் விலையும் குறையும்.

அமெரிக்காவை கம்யூனிஸ அலை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா கம்யூனிச நாடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த 250 ஆண்டுகளின் தொடக்க காலத்தில் இருக்கும் நமது நாடு தடுமாறுகிறதா அல்லது முன்னோக்கிச் செல்கிறதா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும்” என தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்குவேன் என்று ட்ரம்ப் அறிவித்திருப்பது குறித்து அமெரிக்கர்கள் சிலர் சமூக ஊடக பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர். இது ஈவுத்தொகை அல்ல; லஞ்சம் என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், ஆளும் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை அமெரிக்காவில் உயர்ந்துள்ளது. அதோடு, மற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இது அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஈரான் உடனான போர் எப்போது முடியும் என்பது இன்னும் உறுதியாக தெரியாமல் உள்ளது. எனவே, எதிர்வரும் தேர்தல் டொனால்டு ட்ரம்ப்புக்கு பெரும் சவாலாக விளங்கும் என கூறப்படுகிறது.

Share this content:

You May Have Missed