Loading Now

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்று புறப்பட்டுச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்று (செப்.10) புறப்பட்டு செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக இன்று இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.

லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்கு தனது நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்வையிட இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட உள்ளார். இந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக அரசின் உயரதிகாரிகள் ஏற்கெனவே லண்டன் புறப்பட்டு சென்றுள்ளனர்.

லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு துபாய் வழியாகச் செப்.17-ம் தேதி காலை சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வரான பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

You May Have Missed