‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி கும்பலிடம் ரூ.5.50 கோடியை இழந்த கோவை தொழிலதிபர்
கோவை: டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக மிரட்டி கோவை தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 75 வயதான தொழிலதிபரின் செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர்கள், “மும்பையில் இருந்து போலீஸ் அதிகாரிகள் பேசுகிறோம், உங்கள் வங்கிக் கணக்கு மூலமாக பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் நாங்கள் சொல்லும் கணக்குக்கு அனுப்ப வேண்டும்.
அந்த பணம் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்பது தொடர்பாக நாங்கள் விசாரித்த பின்னர், அந்த பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்போம்” என தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய தொழிலதிபர் தனது வங்கி கணக்கில் உள்ள ரூ.5 கோடியே 50 லட்சத்தை 2 தவணையாக அந்த நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள், இன்னும் எவ்வளவு பணம் உள்ளது எனக் கேட்ட போது, இருக்கும் பண விவரத்தை தொழிலதிபர் சொல்லியுள்ளார். அதையும் எடுத்து அனுப்புமாறு மர்ம நபர்கள் மிரட்டியதால், தொழிலதிபர் வங்கிக்கு நேரடியாக சென்று மேலும் ரூ.3.50 கோடியை எடுத்துள்ளார். தொழிலதிபர் ஓரிரு நாட்களில் அதிகளவு பணத்தை எடுத்ததால் சந்தேகமடைந்த வங்கி ஊழியர்கள் அவரிடம் விசாரித்தபோது முறையாக பதில் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, வங்கி ஊழியர்கள் சைபர் கிரைம் போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் தொழிலதிபரிடம் விசாரி்த்தபோது, மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன. அவருக்கு டிஜிட்டல் மோசடி குறித்து விளக்கிய போலீஸார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.