Loading Now

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

image-4 ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

கம்பம்: இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு கிராமத்தில் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்கி மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (33). இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பதவியில் காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகள் சுட்டதில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் குண்டு ஊடுருவியது. பலத்த காயமடைந்த நிலையிலும் இவர் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று, தனது குழுவைக் காப்பாற்றினார். இந்த வீர தீர செயலைபாராட்டி இவரை கவுரவிக்கும் வகையில் இந்திய இவருக்கு கீர்த்தி சக்ரா விருதினை அறிவித்தது. 2026-ஆம் ஆண்டு இந்திய அரசு 7 வீரர்களுக்கு இந்த விருதை வழங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சேர்ந்த மீனாட்சி சுந்தரமும் ஒருவர். கடந்த 8-ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதை மீனாட்சி சுந்தரத்துக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், விடுமுறையில் இவர் சொந்த கிராமமான காமகவுண்டன்பட்டிக்கு இன்று பிற்பகல் வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தாடை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கைகொடுத்து இவரை பாராட்டினர்.

தொடர்ந்து பொன்னாடை போர்த்தி கவுரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். முன்னாள் ராணுவத்தினர் சிலர் கூறுகையில், “அதிவீரச் செயல்களுக்காக இந்திய ராணுவத்தால் வழங்கப்படும் இந்த விருது அசோக சக்ரா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள ஓர் உயரிய விருது ஆகும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வீரர் இந்த விருது பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed