“மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமரசம் செய்துகொள்ள மாட்டார்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமரசம் செய்து கொள்ளமாட்டார்,” என்று தமிழ்நாடு காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எஸ்.சத்தியமூர்த்தியின் 137-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஆக.19) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, சத்தியமூர்த்தியின் உருவப்படுத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சத்தியமூர்த்தியின் சிலைக்கு செல்வப்பெருந்தகை மற்றும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: “நூற்றாண்டு விழா காணும் கருணாநிதிக்கு ரூ.100 நாணயம் வெளியிடுவது என்பது அரசு நிகழ்ச்சி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அதனை வரவேற்றுள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பிரச்சினையுமில்லை. கருணாநிதி ஒரு வரலாறு. அவரை அங்கீகரிப்பவர்களை தமிழ்நாடு காங்கிரஸும் அங்கீகரிக்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின் மதவாத சக்திகளுடன் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். காமராஜருக்குப் பின்னர் தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர். அவரை யார் வாழ்த்தினாலும் மகிழ்ச்சியடைவோம்.

உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை அதிமுக அனுமதித்தது. தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுத்து, பின்னுக்குத் தள்ளி மத்திய அரசின் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை. கருணாநிதியை இதற்கு முன்பு காழ்ப்புணர்ச்சியுடன் பேசியவர்கள் இன்று மேடை ஏறி அவரை வாழ்த்துகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். ஆனால், தேர்தல் பரப்புரையில் திமுகவையும், கருணாநிதியையும் வசைபாடியதை பாஜக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Share this content:

Post Comment

You May Have Missed