தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கேஆர்எஸ் அணை நீர்மட்டம் உயர்வு
பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருவதால், கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை முழுவதுமாக நிரம்புவதற்கு இன்னும் 3 அடிகளே இருப்பதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 253 கன அடி நீர்வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 19.45 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மொத்தமாக 58 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
Share this content:
Post Comment