“விக்கிரவாண்டி வெற்றியை பணம் கொடுத்து வாங்கியது திமுக” – கே.பி.ராமலிங்கம் விமர்சனம்

நாமக்கல்லில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

நாமக்கல்: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி என்பது தெரிந்த விஷயம்தான். அனைத்து வாக்குகளும் பணத்துக்கு விலை போய்விட்டன” என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீரழிவு குறித்து மாநில அரசு கவலைப்படுவதில்லை. இதுபற்றி கேள்வி எழுப்பினால் வேறு மாநிலங்களில் நடைபெறும் பிரச்சினைகளை பேசி திசை திருப்புகின்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க திமுகவின் ஊது குழலாக, பணம் பெற்றுக்கொண்டு இரு கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியினரும் இருந்து வருகின்றனர்.

திமுக அரசு மீது வரும் பழிகளை மறைக்கவே காங்கிரஸ் கட்சியினர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பேசி போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தேர்தலுக்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது அதிகாரபூர்வமாக தெரிந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ரவுடி லிஸ்டில் இருந்ததால் தான் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க ஆட்சியர் கையெழுத்துப் போட்டிருப்பார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட தமிழக அரசு தனிப்பட்ட முறையில் யார் மீதும் அக்கறை செலுத்தவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி என்பது தெரிந்த விஷயம் தான். இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமல்ல. அனைத்து வாக்குகளும் பணத்துக்கு விலை போய் விட்டன. 26 அமைச்சர்கள், 18 எம்பி-க்கள், 86 எம்எல்ஏ-க்கள், 162 உள்ளாட்சி தலைவர்கள் தேர்தல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு பெருந்தொகையை செலவு செய்து மக்கள் நம்பிக்கையை திமுக பெற்றுள்ளது.

இந்த வெற்றியை திமுக பணம் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த மமதையில் திமுக இருப்பதால் விஷச்சாராயம் இறப்புகூட இனி அவர்களுக்குக் கவலை இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதால் அவரும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். காந்தி, காமராஜர் என பெயர் சொல்லும் காங்கிரஸ் கட்சி விஷச்சாரயத்தை ஒழிக்க வேண்டும் என போராட்டம் நடத்தவில்லை. திமுக அரசுக்கு எதிராக உள்ள அதிருப்தியை திசை திருப்பவே போராட்டம் நடத்துகின்றனர் என்றார்” என்றார்.

Share this content:

Previous post

சங்கமித்ரா விரைவு ரயிலில் சக பயணிகளின் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் – சென்னையில் தாயும் சேயும் நலம்

Next post

வங்கதேச கலவரத்தில் 115 பேர் உயிரிழப்பு: 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

Post Comment

You May Have Missed