ஓசியில் நிலக்கடலை கேட்டு தகராறு: ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
திருச்சி: கடைக்காரரிடம் ஓசியில் வறுத்த நிலக்கடலை கேட்டு தகராறில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பட்டாணிக் கடை வைத்திருப்பவர் ராஜன் பிரேம்குமார். அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கடைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராதா(58),வறுத்த நிலக்கடலை கேட்டுள்ளார்.
கடையில் இருந்த ராஜன் பிரேம்குமாரின் மகன் ஷாம் ஆஸ்பாஷ், ‘‘எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும்?’’ என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராதா, ‘‘நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன். வேறு ஸ்டேஷனிலிருந்தா வந்து கேட்கிறேன். கொஞ்சம் கொடுப்பா’’ என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கடையிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜன் பிரேம்குமார் வீடியோ ஆதாரத்துடன், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்எஸ்ஐ ராதாவை பணியிடை நீக்கம் செய்துஆணையர் என்.காமினி உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்எஸ்ஐ ராதா பட்டாணி கடையில் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சக போலீஸார் கூறும்போது, “சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா கொஞ்சம் வெகுளியானவர். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. அவர்செய்தது சரி என்று சொல்லவில்லை. அவர் மீது புகார் அளித்தபின்னர், வீடியோவை சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.
Share this content:
Post Comment