ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதிக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீஸில் புகார்
புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், யூடியூபர் துருவ் ரதி ஒளிபரப்பிய எனக்கு எதிரான ஒருதலைப்பட்சமான வீடியோ நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. எனக்கு எதிராக கொலை, பாலியல் மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்க கட்சித் தலைமை முயற்சித்து வருகிறது.
யூடியூபர் துருவ் ரதியை தொடர்பு கொண்டு எனது தரப்பு விளக்கத்தை அளிக்க முயற்சித்த போதிலும் அவர் எனது அழைப்புகளையும், செய்திகளையும் புறக்கணித்தது ஏமாற்றமளித்தது. இதுகுறித்து, நான் டெல்லி போலீஸில் புகார் அளிக்கிறேன். அவர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அதை தூண்டியது யார் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 13-ம் தேதி அன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமார் மே 18-ல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share this content:
Post Comment