ரூ.62 கோடி மோசடி ராணுவ வீரர் கைது
ஈரோடு: ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ், நசியனூர் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் என்ற நிறுவனங்கள் 2017ல் துவங்கப்பட்டது. இதன் நிர்வாக இயக்குநராக ஈரோடு இடையன்காட்டு வலசுவை சேர்ந்த நவீன்குமார் (38) இருந்தார். இங்கு முதலீடு செய்தால் பல மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு, நிர்வாகிகள் தலைமறைவாகினர். முதலீட்டாளர்கள் புகாரின்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி சென்னையில் இருந்து துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற நிர்வாக இயக்குநர் நவீன்குமாரை கைது செய்தனர். 500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.800 கோடிக்கு மேல் முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவே வழக்கு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் வரை 2 மோசடி நிறுவனங்களிலும் ரூ.62 கோடி வரை முதலீடு செலுத்தியதாக 345 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 10 மாதமாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான முன்னாள் ராணுவ வீரர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வன், சேலத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
Share this content:
Post Comment