லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? – ஐகோர்ட்
சென்னை: ‘லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில் திறன் மேம்பாட்டுக்காக போதுமான நிதி ஒதுக்காதது ஏன்?’ என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தலை அனுமதிக்க தன்னிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சேலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர, புகார்தாரரான சக்திவேல் மற்றும் அவரது தாயாரின் செல்போன் பதிவுகளையும், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் 15 நாட்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், கண்காணிப்பு கேமரா பதிவுகளை குறைந்தது 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அதுதொடர்பாக தமிழகத்தில் 2 ஆண்டுகள் கழித்த பிறகே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்பணி படிப்படியாக நடந்து வருகிறது. அதேபோல 18 மாதங்களுக்கு கேமரா பதிவுகளை பாதுகாப்பாக பராமரிக்க திறன் மேம்பாட்டுக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டதும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழகம் முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுக்கான நிதியை ஒதுக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக மனிதவள மேலாண்மை துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.17-க்கு தள்ளி வைத்துள்ளார்.