Loading Now

‘பலனற்றதா பிரிக்ஸ் உச்சி மாநாடு?’ – ப.சிதம்பரம் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: “கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் கண்ணுக்குத் தெரியும் பலன் ஏற்பட்டதாக கருதவில்லை,” என ப.சிதம்பரம் விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்த ப.சிதம்பரம், பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் கிடைத்துள்ள பலன்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

“நமது நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து எத்தனை அதிபர்கள், பிரதமர்கள் வருகிறார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் உறுதியான பலன்களோ அல்லது குறிப்பிடத்தக்க முடிவுகளோ கிடைத்ததாக நான் கருதவில்லை.

நாம் பிரிக்ஸ், எஸ்சிஓ (SCO), ஜி20 (G20) மற்றும் குவாட் (QUAD) ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறோம். இவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்னால் அதைக் காண முடியவில்லை. கடந்த இரண்டு அல்லது மூன்று மாநாடுகளில் எந்தப் பலனையும் நான் காணவில்லை. ஆனால், முந்தைய காலங்களில் பிரிக்ஸ் உச்சி மாநாடுகள் சில உறுதியான பலன்களைத் தந்திருந்தன” என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

ப. சிதம்பரத்தின் இந்தக் கருத்து தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக எம்பி நளின் கோலி, “பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள பல நாடுகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு எனும் முக்கிய நிகழ்வை இந்தியா நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், சிதம்பரத்தின் இந்தக் கருத்துகள் ஆச்சரியமளிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ன? ராஜதந்திரத்தை, ஒரு வணிகப் பரிமாற்றமாகப் பார்க்க வேண்டுமா? ‘நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள்?’ என்பது போன்ற அணுகுமுறையா இது?

கண்ணுக்குத் தெரியும் அல்லது உறுதியான பலன் என்று அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள்? உறுதியான பலன்களைப் பற்றிப் பேசுவதானால், 1947 முதல் 2014 வரை ராஜதந்திர விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த அணுகுமுறை என்னவாக இருந்தது என்பது குறித்து நாமும் கேள்வி எழுப்பலாம்.

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, உறுதியான பலன்கள் குறித்துப் பேசும்போது, ​​காங்கிரஸ் கட்சி தன் மீதே கேள்விகளை எழுப்பிக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்குப் பல பதில்களை அளிக்க வேண்டியுள்ளது.

சிதம்பரத்தின் விசித்திரமான தர்க்கத்தின்படி பார்த்தால், எந்தப் பலனும் தெரிவதில்லை.

நாளை, காங்கிரஸ் கட்சியால் எந்தப் பலனும் இல்லை என்று யாராவது சொன்னால், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாட்டை அப்போதே நிறுத்திக்கொள்ளுமா? எந்த விதமான நியாயமான காரணமும் இல்லாத நிலையில், சிதம்பரம் அரசியல் ஆதாயத்துக்காகவே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மோடியின் அரசு செய்யும் எதையும் விமர்சிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லாதபோதும் கூட எப்படியாவது விமர்சிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முயற்சிதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

Share this content:

You May Have Missed